முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
தலைப்புக் கட்டுரை

அரசு அங்கீகாரத்துடன் நிகழும் படுகொலைகள்

Sridhara Srinivasa Dasa · 8 நவம்பர், 2021 · ⏱️ 9 நிமிட வாசிப்பு

எழுத்து அளவு

— வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ் உலகம் முழுவதும் அரசு அங்கீகாரத்துடன் பல்வேறு படுகொலைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. அப்படி என்ன படுகொலைகள் நிகழ்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம். தாலிபான்களைப் பற்றிக் கூறுகிறோமா, வங்காளதேசத்தில் நிகழ்ந்ததைக் கூறுகிறோமா, இஸ்ரேல்-பாலஸ்தீனம் பற்றி கூறுகிறோமா, சிரியாவில் நிகழ்ந்ததைக் கூறகிறோமா, சவுதியில் நிகழ்ந்ததைக் கூறுகிறோமா, இல்லை கொரோனாவின் பின்னணியில் இருக்கும் சீன சதித்திட்டத்தைப் பற்றிக் கூறுகிறோமா? இச்சம்பவங்கள் அனைத்திலும் அப்பாவி குடிமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர் என்பதும், இவற்றில் அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பங்கேற்றுள்ளனர் என்பதும் பரவலாகப் பேசப்படும் தகவல். ஆயினும், நாம் இங்கு அவற்றைப் பற்றிப் பேசப் போவதில்லை. மேலே கூறப்பட்டுள்ள படுகொலைகள்/வன்முறைகளை உலக அமைப்புகள் பலவும் கண்டித்துள்ளன. அத்தகு கண்டனங்கள் வரவேற்கத்தக்கவை, முற்றிலும் சரியானவை. அதே சமயத்தில், ஏறக்குறைய உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிகழக்கூடிய சில படுகொலைகளுக்கு எதிராக பெரும்பாலும் யாரும் குரல் கொடுப்பதில்லை, கண்டனம் தெரிவிப்பதில்லை; அவற்றைப் பற்றியே நாம் இங்கு விவாதிக்கவுள்ளோம். உலகம் முழுவதும் இயங்கக்கூடிய பல்வேறு கசாப்புக் கூடங்களில் தினந்தோறும் இலட்சக்கணக்கான அப்பாவி விலங்குகள் படுகொலை செய்யப்படுகின்றன. கோடிக்கணக்கான மீன்கள் [கொரோனா நோயாளியைப் போல] மூச்சு விட இயலாமல் கொல்லப்படுகின்றன. கருக்கலைப்பு மையங்களில் தினந்தோறும் இலட்சக்கணக்கான சிசுக்கள் கொல்லப்படுகின்றன. இந்தப் படுகொலைகள் யாவும் அரசு அனுமதியுடன் நிகழ்கின்றன. பசுக்கள், கன்றுகள், ஆடுகள், பறவைகள், மீன்கள், சிசுக்கள் என பலவும் கருணையின்றி கொடூரமாக தினந்தோறும் கொல்லப்படுவது நியாயமா? மனிதனும் மிருகமும் உண்ணுதல், உறங்குதல், உடலுறவு, தற்காப்பு ஆகிய நான்கும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலான பொதுவான செயல்கள்; இருப்பினும், தர்மத்தை அறிந்து ஆராயும் தன்மை மனிதனுக்கு மட்டுமே உண்டு என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, தர்மத்தைக் கண்டறிவதும், உடல் சார்ந்த சாமான்ய தர்மத்திற்கும் ஆத்மா சார்ந்த ஸநாதன தர்மத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்துணர்வதும் மனிதனின் தலையாய குறிக்கோளாகும். “நாம் உடல் அல்ல, ஆன்மீக ஆத்மா” என்றே வேத சாஸ்திரங்கள் விளக்குகின்றன. ஆனால் நவீன விஞ்ஞானம் “வளர்ச்சி” என்ற போர்வையில், உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆத்மாவின் இருப்பை மறுக்கின்றது. இந்த நாகரிகத்தைப் பின்தொடரும் மனிதன் நாத்திகக் கருத்துகளின் காரணமாக மறுபிறவியையும் கர்ம வினைகளையும் மறுக்கின்றான். அதனால், அவன் வேத சாஸ்திரங்கள் கூறுவதைப் போன்று தர்மத்தை அறியாத இரண்டு கால் மிருகமாக வாழ்கிறான். தர்மத்தை அறியாத மனிதனின் மனதில் வெறி பிடிக்கும்போது, அவன் மற்றவர்களைக் கொலை செய்கிறான், கொலைச் செயலின் தீமைகளையும் பின்விளைவுகளையும் அவன் அறிவதில்லை; அதுபோலவே, நாக்கில் வெறி பிடிக்கும்போது, அவன் விலங்குகளைக் கொலை செய்கிறான். காம வெறி தலைக்கு ஏறி தவறான வழியில் குழந்தை உருவாகும்போது, அந்தக் குழந்தையைக் கருவிலேயே கொலை செய்கிறான். அதாவது, வெறி பிடித்தவனே கொலைகாரனாகிறான். அவன் உண்மையை உணர்ந்து வாழ்வதற்கு தர்மம் அவசியமாகிறது. அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? பண்டைய கால மன்னராட்சியாக இருந்தாலும் நவீன கால மக்களாட்சியாக இருந்தாலும், ஒரு நாட்டின் மன்னர் அல்லது அதிபர் என்பவர் தமது பிரஜைகளை அனைத்து அபாயங்களிலிருந்தும் காத்து அனைத்து வசதிகளையும் வழங்கி சரிசமமாக ஆட்சி புரிய வேண்டும். பிரஜை என்று கூறும்போது, அது மனிதர்களை மட்டுமின்றி, ஆடு, மாடு, கோழி, மீன், வயிற்றிலிருக்கும் குழந்தை என அந்நாட்டில் வாழும் எல்லா உயிர்வாழிகளையும் குறிக்கும். ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம் எனும் வாக்கியம் (ஈஷோபநிஷத்) அனைத்தும் பகவான் கிருஷ்ணரின் சொத்து என்பதைக் குறிக்கிறது. எனவே, பகவானின் பிரதிநிதியாகக் கருதப்படும் அரசன் எல்லா பிரஜைகளையும் பகவானின் குழந்தைகளாகக் கருதி, அவர்களது உரிமைகளைப் பாதுகாத்து வழிநடத்த வேண்டியது அவசியம். குரு வம்ச மன்னர்களான யுதிஷ்டிரர், பரீக்ஷித் முதலியோரின் செம்மையான ஆட்சியைப் பற்றிய குறிப்புகளை ஸ்ரீமத் பாகவதம், மஹாபாரதம் முதலிய வேத இலக்கியங்களில் காணலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இன்றைய அரசு, மிருக வதையைக் கண்டிப்பதற்கு பதிலாக அதனை ஊக்குவிக்கிறது! மேலும், மனிதனுக்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, அவனைப் பாழும் குழியில் தள்ளுகிறது! வேத கலாசாரத்தின் தலைமையகமான பாரதம் இன்று பசு மாமிசம் மற்றும் தோல் ஏற்றுமதியில் முன்னணி வகிப்பது கேடுகெட்ட நிலையாகும். மேலும், அரசு அனுமதியுடன் நிகழும் கருக்கலைப்பும் இங்கே தலைவிரித்தாடுகிறது. இவை மட்டுமின்றி, கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்களின் விளம்பரம் வளர்ந்தமையால், தூய்மையான தாம்பத்திய உறவு சீர்குலைந்து, விபச்சாரம் சகஜமான தொழிலாக மாறி விட்டது. இந்த அவல நிலையைக் கண்டிப்பதற்கு பதிலாக, உலகெங்கிலும் இவை பகிரங்கமாகப் பரவி வருகின்றன. தீராத பாவ விளைவை வழங்கும் பசு வதையும் சிசு வதையும் அனைவரும் உயர்வு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேதப் பண்பாட்டில், ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை நிறைவேற்ற, பசுக்களையும் காளைகளையும் சார்ந்துள்ளனர். பசு பராமரிப்பினை வைசியர்களின் தர்மம் என்று பகவத் கீதை (18.44) கூறும்போதிலும், அனைத்து தரப்பட்ட மக்களின் மூளை வளர்ச்சிக்கு பசுவின் பால், தயிர், வெண்ணெய், நெய் முதலியவை முக்கிய பங்காற்றுகின்றன என்பதால், பசுக்களைப் பாதுகாப்பது அனைத்து தரப்பினருக்கும் பொதுவான கடமையாகக் கூறப்படுகிறது. ஒரு குழந்தையைப் பராமரித்து போஷாக்குடன் வளர்ப்பதற்கு தாய்ப்பால் அவசியம். சில மாதங்கள் (அல்லது வருடங்கள்) தாய்ப்பால் குடித்த பின்னர், அனைவரும் வாழ்நாள் முழுவதும் பசுப்பால் பருகியே வளர்வதால், பசு நமக்கு தாயாகிறாள். வேத சாஸ்திரங்கள் ஒரு மனிதனுக்கு ஏழு தாய்மார்கள் உள்ளனர் என்றும், அவர்களுள் பசுத்தாயும் (கோமாதா) ஒருத்தி என்றும் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு தந்தை எவ்வாறு தனது குழந்தைகளுக்காகக் கடுமையாக உழைத்து செல்வம் சேர்த்து பராமரிக்கின்றாரோ, அவ்வாறே காளை மாடும் வயல்களில் கடுமையாக உழைத்து நமக்குத் தேவையான தானியங்கள், காய், கனி, நீர் என அனைத்து வளங்களையும் நமக்கு வழங்குகிறது. எனவே, வேத சாஸ்திரங்கள் (எ.கா. ஸ்ரீமத் பாகவதம் முதல் ஸ்கந்தம், அத்தியாயம் 16, 17) காளையை தர்மத்தின் ஸ்வரூபமாக வர்ணிக்கின்றன. மேலும், பசு மற்றும் காளையின் கோமியமும் சாணமும் நமது உடலுக்கு அகத்திலும் புறத்திலும் கிருமிகளை எதிர்ப்பதற்கான சக்தியை வழங்குகின்றன. மாட்டுச் சாணத்தை யாகத்தில் இடுபொருளாக, சமையலில் எரிபொருளாக, நிலத்தில் உரமாக, வீட்டில் மொழுகு பொருளாக என பல வகைகளில் பயன்படுத்துகிறோம். பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான பசுக்களும் காளைகளும் எல்லா விதத்திலும் நமது உண்மையான நலன்விரும்பி என்று கூறினால், அது மறுக்க முடியாத உண்மையாகும். பசுக்களும் காளைகளும் இவ்வாறு தங்களை முழுமையாக மனிதர்களுக்கே அர்ப்பணித்துள்ள நிலையில், சுயநலம் கொண்ட இரக்கமற்ற மக்கள் பணத்திற்காக பசுக்களைக் கசாப்புக் கூடங்களுக்கு விற்கின்றனர். அவற்றை அடிமாடாக விற்பவர், அடித்துக் கொல்பவர், அதன் மாமிசத்தை விற்பவர், சமைப்பவர், பரிமாறுபவர், புசிப்பவர், அல்லது அவற்றின் தோலைப் பயன்படுத்துபவர் என அனைவரும் தீராத பாவ விளைவுகளினால் பல பிறவிகளில் துன்புறுவர் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. சுயநலவாதிகள் சிலரது வியாபாரத்திற்காக, அவர்கள் மட்டுமின்றி, அவர்களது வாடிக்கையாளர்களும் பெரும் பாவத்தைச் சம்பாதிக்கின்றனர். உலகெங்கும் மிகப் பரவலாக நடக்கும் மற்றொரு பாவச் செயல், சிசு வதை. அமெரிக்கா போன்ற முன்னேறிய (?) நாடுகளில் நிறைமாத கருவைக் கலைத்தால்கூட, “பெண்ணுரிமை” எனும் போர்வையில், அது படுகொலையாகவோ சட்டவிரோத மாகவோ கருதப்படுவதில்லை. இந்தியாவிலும் 24 வார கருவைக் கலைப்பதற்கு வசதி செய்யும் சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்துள்ளது சிலருக்கு நினைவிருக்கலாம். தனது கருப்பையிலுள்ள கருவைக் கலைப்பதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு என்றால், அதே தனி மனித உரிமை அவளது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பொருந்துமே? வயிற்றில் வளர்வது ஒரு தசை என்றும், அதற்கு உயிர் இல்லை என்றும் விஞ்ஞானிகள் சிலர் கூறுகின்றனர். இக்கூற்று முற்றிலும் அபத்தமானது மட்டுமின்றி, அபாண்ட பொய்யுமாகும். குழந்தை கருப்பையிலிருந்து வெளியே வந்த பின்னரே உயிர் பெறுகின்றது என்று கருதுவது விஞ்ஞானமா? நிச்சயம் இல்லை. மக்கள் இன்று பெருந்தொற்று நோய்களினால் மடிவதற்கான முக்கியமான காரணம் அரசாங்க அனுமதியுடனும் ஆதரவுடனும் நிகழும் இம்மாதிரியான கொடூர அநியாயங்களே. [சிசுவதை குறித்த விரிவான கட்டுரை ஒன்றை எதிர் வரும் இதழ்களில் எதிர்பார்க்கலாம். சீர்கேட்டைச் சீர்திருத்தும் வழி துரதிர்ஷ்டவசமாக, இன்று உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பசு மாமிசமும் அதன் தோல் சார்ந்த பொருட்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியினால், இன்று காளை மாடுகளுக்கு பதிலாக டிராக்டர்களும் அறுவடை இயந்திரங்களும் உபயோகிக்கப்படுகின்றன. அதன் விளைவு: காளைகளுக்குத் தீனி போட விரும்பாது கன்றாக இருக்கும் வேளையிலேயே அதனை “அடிமாடு” என்று விற்றுவிடுகிறார்கள். பால் கறப்பது நின்றவுடனே பசுவையும் “அடிமாடு” என்று விற்றுவிடுகின்றனர். இந்த அநியாயத்தைத் தடுக்க, மக்கள் பசுவின் மகிமைகளை உணர்ந்து, மனிதனுக்கு அது வழங்கும் பௌதிக மற்றும் ஆன்மீகப் பலன்களைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் தங்களது தாய்தந்தையரை முதுமையில் கொல்ல சம்மதிப்பார்களா? நிச்சயம் இல்லை! அவ்வாறு இருக்கையில், தாயாகிய பசுவையும் தந்தையாகிய காளையையும் கசாப்புக் கடைக்கு அனுப்பி, சிறிதும் இரக்கமின்றி அவற்றின் மாமிசத்தை உண்பதற்கு மக்கள் தயாராக இருப்பது விந்தையிலும் விந்தை! ஆயினும், அது தினசரி நிகழ்வாக மாறுமளவிற்கு, மனித சமுதாயம் தரம் தாழ்ந்து விட்டது. பசுவின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் சிறிது கருணை கொண்டு, மாமிசத்தை அடியோடு உண்ண மறுத்தால், கசாப்புக் கூடங்கள் மூடப்படும். விவசாயிகள் “அடிமாடு” என்னும் எண்ணத்தை மறக்க வேண்டும். அதே போன்று, தோலினால் செய்யப்பட்ட பர்ஸ், பெல்ட், கைப்பை, நாற்காலி, மெத்தை முதலிய பொருட்களை நிராகரித்து, அதற்கு பதிலாக துணி அல்லது மாற்றுப் பொருளால் செய்யப்பட்டவற்றை நாம் பயன்படுத்த வேண்டும். அப்போது, வருமானம் இல்லாவிடில், நிச்சயம் படிப்படியாக கசாப்புக் கூடங்கள் மூடப்படும். அதே போன்று, புலன் கட்டுப்பாட்டையும் முறையான தாம்பத்தியத்தின் அவசியத்தையும் பரவலாக எடுத்துரைப்பதன் மூலம், சிசு வதையிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. https://media.tamilbtg.com/uploads/2021/11/1.jpg மக்கள் தங்களது தாய்தந்தையரை முதுமையில் கொல்ல சம்மதிப்பார்களா? நிச்சயம் இல்லை! அவ்வாறு இருக்கையில், தாயாகிய பசுவையும் தந்தையாகிய காளையையும் கசாப்புக் கடைக்கு அனுப்பி, சிறிதும் இரக்கமின்றி அவற்றின் மாமிசத்தை உண்பதற்கு மக்கள் தயாராக இருப்பது விந்தையிலும் விந்தை!” கிருஷ்ண உணர்வே நிரந்தர தீர்வு ஆகஸ்ட் 22, 1975 அன்று அப்போதைய பாரத பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து சில முக்கிய விஷயங்களைப் பேசுவதற்கு ஸ்ரீல பிரபுபாதர் அனுமதி பெற்றிருந்தார். ஆயினும், துரதிர்ஷ்டவசமாக, அந்த சந்திப்பு வேறு சில காரணத்தினால், மிகவும் குறுகியதாக அமைந்து, பிரபுபாதரால் தாம் பேச நினைத்தவற்றை எடுத்துரைக்க இயலவில்லை. பிரபுபாதர் தமது குறிப்பில், பாரதம் முழுவதும் ஆன்மீக முன்னேற்றமடைந்து கிருஷ்ண உணர்வை வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும் திட்டங்களை எழுதி வைத்திருந்தார். அவற்றில் ஒன்று, பொது இடங்களில் மாமிச விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்பதாகும். அதாவது, மாமிசம் உண்ணும் பழக்கத்தை முற்றிலும் கைவிட இயலாதவர்கள் தங்களது வீடுகளில் தாங்களே கொன்று உண்ண வேண்டும். அதன் மூலமாக, அவர்களின் இதயத்தில் (சிறிதளவேனும் ஈரம் இருந்தால்) மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினரும் தினசரி ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனத்தில் ஈடுபட வேண்டும் என்றும், உலகெங்கும் கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் இங்ஙனம் வேண்டுவதன் நோக்கம் என்ன? இதை மக்கள் ஏற்று ஆதரிப்பர் என்று எங்ஙனம் அவர் எதிர்பார்த்தார்? இந்திய இளைய சமுதாயமே எழுக எனும் புத்தகத்தில் தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி இதற்கான விடையைப் பின்வருமாறு விளக்குகிறார்: “ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் (ஜபமும் கீர்த்தனமும்) மிகவும் ஆற்றல் மிக்கது. இம்மந்திரம் நமது மனதைத் தூய்மைப்படுத்தி, இறையன்பைத் தட்டி எழுப்புகிறது. மக்கள் ஹரே கிருஷ்ண ஜபம் செய்தால், அவர்களது உள்ளம் கட்டாயம் மாறும். அவர்கள் அமைதியானவர்களாகவும் தெய்வீகமானவர்களாகவும் மாறுவர். மாமிசம் உண்பதிலும், போதைப் பொருட்களை ஏற்பதிலும், முறையற்ற ஆண்-பெண் உறவிலும் ஆர்வமிழந்து, அவர்கள் நல்லதொரு நாட்டின் முதுகெலும்பாகவும் சிறந்த குடிமக்களாகவும் மாறுவர்.” எனவே, நாம் ஆன்மீக ஆத்மா என்பதாலும், கிருஷ்ண உணர்வே ஆத்மாவின் இயல்பான நிலை என்பதாலும், கிருஷ்ண பக்தி என்பது இனம், மதம், ஜாதி, நிறம், குலம் பாராது அனைத்து உயிர்வாழிகளுக்கும் பொதுவான வழிபாட்டு முறையாகும். குலம், இனம், மதம், ஜாதி முதலியவை ஒருவர் பிறக்கும் இடத்தையும் குடும்பத்தையும் சார்ந்த பௌதிகக் கருத்துகளாகும்; ஆன்மீக ஆத்மாவிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆத்மா பகவான் கிருஷ்ணரின் நித்திய சேவகன் என்பதை உணரும் மாத்திரத்தில், உடல் சம்பந்தமான உணர்வுகளைத் துறந்து, நம்மால் அனைத்து ஜீவராசிகளையும் கருணையோடு சமமாகக் காண முடியும். இந்த வழிமுறையே தற்போதைய கவலைக்கிடமான நிலையைத் திருத்தி நம் அனைவருக்கும் உண்மையான மகிழ்ச்சியை உண்டாக்கும். பகவான் கிருஷ்ணரின் காரணமற்ற கருணையைக் கொண்டது அவரது திருநாம உச்சாடனமே. இதனை “தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ளவல்ல” என்று தலையாய பக்தரும் வைஷ்ணவ ஆச்சாரியருமான ஸ்ரீ நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் (3.5.11) போற்றிப் பாடுகிறார். நாம் அனைவரும் இம்மாதிரியான உயர்ந்த வைஷ்ணவ ஆச்சாரியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பகவான் கிருஷ்ணரின் நாமம், புகழ், லீலை, ரூபம், குணம் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்து, வாழ்வின் மிகவுயர்ந்த பலனைப் பெறுவோமாக.

புதுப்பிக்கப்பட்டது: 18 டிசம்பர், 2024

← முகப்பு