தனி மனித ஒழுக்கம்: தலைவர்களுக்குத் தேவையா?
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் அண்மையில் வெளிவந்த எப்ஸ்டின் ஃபைல்ஸ் உலக நாடுகளின் அதிபர்கள், விஞ்ஞானிகள், செல்வந்தர்கள் என பல்வேறு தலைவர்களின் தனி மனித ஒழுக்கம் குறித்து மிகப்பெரிய விவாதங்களை எழுப்பியுள்ளது. தமிழகத்திலும், ஓர் அரசியல் தலைவரின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு சமீபத்தில் பேசுபொருளாக எழுந்தது. தலைவர்கள் தனி மனித ஒழுக்கத்தில் மிகவும் பலவீனமாக இருக்கின்றனர் என்பதை இவை படம் பிடித்துக் காட்டுகின்றன. நமக்கு யார் மீதும் எந்தவொரு தனிப்பட்ட விருப்புவெறுப்பும் கிடையாது. ஆயினும், தனி மனித ஒழுக்கம் தலைவர்களுக்குத் தேவையா என்பதைச் சற்று விவாதிக்க விரும்புகிறோம். Subscribe Magazine ஒழுக்கம் என்றால் என்ன? உள்ளத்தில் ஏதேனும் ஆசை எழுந்தால், அதுகுறித்து முன்னோர்கள் என்ன கூறியுள்ளனர் என்பதையும், அச்செயல் அறத்திற்கு (தர்மத்திற்கு) உகந்ததா என்பதையும் ஆராய்ந்து, அதற்கேற்ப உள்ளத்தை நல்வழிப்படுத்துவதே ஒழுக்கம். இதுவே சான்றோர்களின் வாழ்க்கை முறை என்பதை அகநானூற்றில் வரும் விழையா உள்ளம் விழையும் ஆயினும் என்னும் பாடல் (286) உணர்த்துகிறது. மனித வாழ்விற்குத் தேவையான ஒழுக்கங்களை விளக்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையின் இரண்டாவது பாடலில், ஒழுக்கம் தவறாமல் வாழ்பவர்கள் பின்வரும் எட்டுப் பேறுகளைப் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது: (1) நல்ல குடியில் பிறத்தல், (2) நீண்ட நாள் வாழ்க்கை, (3) செல்வம், (4) உடலின் தோற்றப் பொலிவு, (5) நில உரிமை, (6) பாராட்டு, (7) கல்வி நலம், (8) நோய் இன்மை. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் என்னும் ஔவையாரின் வரிகள் (கொன்றை வேந்தன், பாடல் 11), ஒழுக்கம் குறித்த வள்ளுவரின் குறள்கள் முதலிய பல வழிகாட்டிகள், நம் முன்னோர்கள் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு உதவி வந்துள்ளன. தனி மனித ஒழுக்கம்: சமுதாயத்திற்குத் தேவையா? தனி மனித ஒழுக்கம் சரியாக இருப்பதே சமுதாயத்தை நல்வழியில் கொண்டு செல்லும். ஏனெனில், மனிதன் ஒரு சமூக விலங்கு. மரத்தைப் போல தனித்து வாழும் இயல்பு மனிதனுக்கு இல்லை; ஏன், விலங்குகளுக்குக்கூட இல்லை. உணவு முதலான தேவைகளுக்காக ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டிய தேவையை நம்மால் தவிர்க்க முடியாது. “தனி மரம் தோப்பாகாது” என்பது பழமொழி. ஆயினும், தனி மரங்கள் இல்லாமல் தோப்பு உருவாகவும் முடியாது. மரத்தைப் பற்றி கூறப்பட்ட இந்தக் கூற்று, மனித சமுதாயத்திற்கும் பொருந்துகிறது. கூடை நிறைய இருக்கும் தக்காளிகளில் ஒன்று அழுகத் தொடங்கினால், அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. இது பொதுநலன் கருதி செய்யப்படுகிறது. அதுபோலவே, சமூகமாக வாழும் மனிதர்களில் சிலர் ஒழுக்கமின்றி நடந்து கொண்டால், அது மற்றவர்களையும் சீரழிக்கக் கூடும். இவ்வாறு சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஒழுக்கமற்ற மனிதர்கள் தலைவர்களாக இருக்க நேர்ந்தால், சமுதாயம் எங்கே செல்லும்? Subscribe Magazinehttps://media.tamilbtg.com/uploads/2026/04/keep_the_same_202604181556-copy-scaled.webp தலைவன் என்பவன் யார்? “தலைவர்கள்” என்றவுடன், பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களை மட்டும் நினைத்துவிடக் கூடாது. மனித சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் பல்வேறு நபர்கள் தலைவர்களாக இருக்கின்றனர். இக்கட்டுரையைப் படிக்கும் நீங்களும் ஒரு வகையான தலைவர்தான், இதை எழுதும் அடியேனும் ஒரு வகையான தலைவன்தான். நான்கு பேர் வசிக்கும் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாக இருப்பவன் “குடும்பத் தலைவன்” என்றுதானே அழைக்கப்படுகிறான்! தாய், தந்தை, கணவர், வயதில் பெரியவர், ஆசிரியர், எஜமானர், நிறுவன அதிகாரி, மேலாளர், பிராமணர், குரு, சந்நியாசி, அரசியல் தலைவர், சமூகத் தலைவர்—இவ்வாறு எத்தனையோ வகையான தலைவர்கள் இருக்கின்றனர். தலைவர்களுக்கான பொறுப்பு இந்தத் தலைவர்கள் ஒவ்வொருவரும் தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ வேண்டியது அவசியம். ஒரு குழந்தை தன்னுடைய பல்வேறு பழக்கவழக்கங்களை தாய்தந்தையரிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறது. அவர்கள் நல்ல ஒழுக்கத்துடன் இருந்தால், குழந்தையும் அதனைப் பின்பற்றும். அதுபோல, அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவர் தவறு செய்தால், கீழே இருப்பவர்களும் அதனைச் செய்வதற்கு வாய்ப்பு அதிகம். ஊழல் செய்யும் முதல்வர் அல்லது அமைச்சரால், தனக்குக் கீழே இருப்பவர்களைக் கட்டுப்படுத்த முடியுமா? ஒருவன் எந்த தலைமைப் பொறுப்பில் இருந்தாலும், முறையான வழிகாட்டியாக இருந்து தன்னைச் சார்ந்தவர்கள் உயர்வு பெறுவதற்கு உதவ வேண்டியது அவனது கடமையாகும். அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு தலைவனும் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து மக்களை வெளிக்கொணர முயல வேண்டும் என்றும், அவ்வாறு செய்ய முடியாதவர்கள் தலைவர்களாக இருக்கக் கூடாது என்றும் ஸ்ரீமத் பாகவதம் (5.5.18) எச்சரிக்கிறது. Subscribe Digital Versionhttps://media.tamilbtg.com/uploads/2026/04/Parents-copy.webp பொது வாழ்விற்கு வந்த தலைவர்கள் மேற்கூறிய தலைவர்களில், பொது வாழ்விற்கு வந்தவர்களின் பொறுப்பு மிகவும் அதிகம். எத்தகைய உதாரணத்தை மக்களுக்கு வழங்குகிறோம் என்பதில் அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருத்தல் அவசியம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (3.21) பின்வருமாறு கூறுகிறார்: யத் யத் ஆசரதி ஷ்ரேஷ்டஸ் தத் தத் ஏவதரோ ஜன: ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்ததே “மதிக்கத்தக்க தலைவன் எந்தெந்த செயல்களைச் செய்கிறானோ, அதையே மற்ற மக்களும் செய்வர். அவன் எத்தகைய உதாரணத்தை அமைத்துக் கொடுக்கின்றானோ, அதையே மக்களும் பின்பற்றுவர்.” ஆகவே, எல்லாத் தலைவர்களையும்விட, பொது வாழ்விற்கு வந்துள்ள தலைவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. தலைவர்களுக்கான உயர்ந்த தரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 12.51–53) பின்வருமாறு உரைக்கிறார்: “[தலைவர்களுடைய] மனதிலும் சொல்லிலும் செயலிலும் பொது மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றிய அச்சம் இருக்க வேண்டும். வெள்ளைத் துணியில் விழுந்த ஒரு சொட்டு மையைப் போல, தலைவர்களுடைய சிறிய ஒழுக்கச் சீர்கேடுகூட, காட்டுத் தீயைப் போல பரவிவிடும். பானை நிறைய பால் இருந்தாலும், அதில் ஒரு துளி சாராயம் கலந்துவிட்டால், அது தீண்டத்தகாததாகிவிடும்.” தலைவர்களின் தரம் இவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கையில், மிகவும் மோசமான தரங்கெட்ட செயல்களில் ஈடுபட்டபடி, மழையில் நிற்கும் எருமை மாட்டைப் போல வாழும் இன்றைய தலைவர்களை “தலைவர்கள்” என்று கூற முடியுமா? Subscribe Digital Versionhttps://media.tamilbtg.com/uploads/2026/04/An_image_of_ink_on_clothes-copy-scaled.webp தரங்கெட்ட தலைவர்கள் நிச்சயமாக, இன்றைய உலகத்தில் உயர்ந்த தரத்துடன் குற்றமே இல்லாத தலைவனைக் காணுதல் ஏறக்குறைய இயலாத காரியம். அதை மறுக்கவில்லை. ஆயினும், போதைப் பழக்கம், தகாத பாலுறவு, சூதாட்டம் முதலிய மோசமான ஒழுக்கச் சீர்கேடுகள் தலைவர்களிடம் காணப்பட்டு, அவர்கள் அதனை தைரியமாக பொதுவெளியில் வெளிப்படுத்தினால், நிச்சயம் நமது சமுதாயம் வேறு எங்கோ செல்கிறது என்பது தெளிவு. இந்தத் தரங்கெட்ட தலைவர்கள் ஒழுக்கமின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது மட்டுமின்றி, பணத்திற்காக அதனை விளம்பரமும் செய்கின்றனர். மேற்கூறிய ஒழுக்கச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் இத்தகு தலைவர்கள் பலர் நடிப்பதை அனைவரும் அறிவோம். அந்த விளம்பரங்களைப் பார்க்கும் அறிவிலிகள் பலர் அப்பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். சாதாரண மனிதன் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கும் தலைவன் ஒருவன் அதில் நடிப்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. தலைவன் தவறான ஒன்றை விளம்பரப்படுத்தினால், அது சமூகமெங்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சிகரெட், பான் மசாலா, சாராயம் போன்றவற்றின் விளம்பரங்களை இங்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். திரைப்படத்தில் வரும் தலைவன் ஸ்டைலாக புகைபிடிப்பதைப் பார்த்து, ஒரு தலைமுறையே புகைபிடிக்கும் பழக்கத்திற்கு மாறியது நினைவிருக்கலாம். Subscribe Digital Versionhttps://media.tamilbtg.com/uploads/2026/04/unnamed-copy.webp தலைவன் ஒழுக்கமின்றி இருந்தால்… தலைவன் ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், நாடு செழிக்கும்; நாட்டு மக்களும் செழிப்புடன் வாழ்வார்கள். மாறாக, தலைவனிடம் சுயக் கட்டுப்பாடு இல்லாவிடில், மூவுலகிலும் ஒருவனது இன்பத்திற்காக இருக்கும் எல்லாப் பொருட்களும் கிடைத்தால்கூட, அவனால் மன நிறைவைப் பெற முடியாது. (ஸ்ரீமத் பாகவதம் 8.19.21) மன்னன் ஒழுக்கம் தவறியவனாக இருந்தால், அவன் ஆட்சி செய்யும் நாட்டில் மழை பொழியாது, பஞ்சம் ஏற்படும்; செல்வமும் புகழும் அழிந்துவிடும்; இறுதியில், அவன் தனது ராஜ்ஜியத்தையும் அதிகாரத்தையும் இழக்க நேரிடும். எனவே, ஒழுக்கம் உயிரைவிட மேலானது என்றும், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும் என்றும் திருவள்ளுவர் (திருக்குறள் 131, 132) கூறுகிறார். அறத்தில் தவறாமல் இருப்பவனே சிறந்த அரசன் என்றும் (திருக்குறள் 384) அவர் கூறுகிறார். தலைவர்களின் பர்சனல் வாழ்க்கை ஒழுக்கத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ளபோதிலும், இன்றைய உலகில் பலர், பொது வாழ்வில் இருக்கும் தலைவன் தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருக்கிறான் என்பதைக் காண மறுக்கின்றனர். “அஃது அவர்களுடைய பர்சனல்” என்று கூறி, தலைவர்களுடைய கொள்கை, பொதுவெளி நடத்தை முதலியவற்றை மட்டும் பார்க்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். அதே சமயத்தில், தலைவன் ஒருவன் ஒரு பெண்ணைக் கற்பழித்துக் கொன்றால், அதனை “பர்சனல்” என்று கூறுவார்களா? நிச்சயமாக இல்லை. ஏன் இந்த வேறுபாடு? ஏனெனில், நாம் எல்லாவற்றையும் நம்முடைய சட்டத்தின் பார்வையில் காண்கிறோம்; உண்மையான நீதியின் பார்வையில் காண்பதில்லை. அதாவது, ஒரு செயல் தனி மனித ஒழுக்கத்திற்குப் புறம்பானதாக இருந்தாலும், அது சட்டத்திற்குப் புறம்பானதாக இல்லாவிடில், அதனை “பர்சனல்” என்று கூறும் வழக்கம் இன்று பரவி வருகிறது. எடுத்துக்காட்டாக, ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் சொந்த விருப்பத்துடன் ஈடுபட்டால் (consensual relationship), இன்றைய சட்டத்தின்படி அது குற்றமாகக் கருதப்படுவதில்லை; ஆகவே, அதனை பர்சனல் என்று கூறுகின்றனர். அதே உறவு 18 வயதை அடையாதவருடன் நிகழ்ந்தால், போக்சோ சட்டம் உடனே செயல்படும். ஆனால், (அமெரிக்கா உள்ளிட்ட) சில நாடுகளில் அது குற்றமாகக் கருதப்படுவதில்லை. ஈராக் நாட்டில் 9 வயது சிறுமியைத் திருமணம் செய்வதை சட்டம் அனுமதிக்கிறது. ஆக, இடம், காலம், சூழ்நிலை என்று மாறிக் கொண்டே இருக்கும் மானிட சட்டத்தை வைத்து, தனி மனித ஒழுக்கத்தை எடைபோடக் கூடாது. இறைவனுடைய சட்டங்கள் ஒருபோதும் மாறு வதில்லை. தமிழகத்தின் முன்னோர்கள் அந்தச் சட்டங்களையே ஒழுக்க நெறிகளாக வழங்கியுள்ளனர். Subscribe Magazinehttps://media.tamilbtg.com/uploads/2026/04/change_the_size_202604181609-copy.webp தலைவர்கள் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும் நமது முன்னோர்கள் தலைவர்களுக்கான உயர்ந்த தரத்தை இவ்வாறு நிர்ணயித்துள்ளபோதிலும், இன்றைய தமிழ்நாட்டில், தமிழர் பாரம்பரியம் பல இடங்களில் மறக்கப்பட்டுவிட்டது. கட்சிப் பெயர்களில் மட்டும் தமிழ், திராவிடம் என்னும் பெருமைமிகு சொற்களை வைத்துக் கொண்டு, “தனி மனித ஒழுக்கம், கிலோ என்ன விலை?” என்று கேட்பவர்களாக பலர் வாழ் கின்றனர். பண்டைய பாரதப் பண்பாட்டில், தலைவர்களாக இருக்க வேண்டியவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப் பட்டன. ஆனால், இன்றைய ஜனநாயகச் சூழலில், விளம் பரத்தில் வல்லவர்களாக இருப்பவர்களே தலைவர்களாக உருவெடுக்கிறார்கள். இவர்களில் பலர் ஊழல்வாதிகள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மக்களும் ஒழுக்கத்தில் தளர்ந்து, சிறிய அளவிலான ஊழல்களுக்குப் பழகிவிட்டதால், ஒழுக்கமற்றவர்கள் தலைவர் களாக உருவெடுக்க வழி ஏற்படுகிறது; பலர் இத்தகு ஒழுக்கங்கெட்ட செயல்களுக்கு முட்டுக் கொடுக்கவும் பழகிவிட்டனர். மக்களாட்சியின் எண்ணற்ற பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. மக்கள் மாக்களாக இருக்கையில், அவர்களிடமிருந்து வரும் தலைவன் மட்டும் மாண்புமிக்கவனாக இருப்பான் என்று எதிர்பார்க்கலாமா? “நாம் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வர்,” என்னும் ஆணவம் இவர்களிடம் நிறையவே இருக்கிறது என்று கூறினால், அது மிகையன்று. அத்தகு ஆணவம் இல்லாவிடில், தங்களது ஒழுக்கமற்ற நிலையை இவர்கள் பொதுவெளியில் வெளிப்படுத்துவார்களா? இத்தகைய நிலை, தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ உலகத்திற்கோ புதிதன்று; வழி வழியாக நிறைய கண்டுள்ளோம். ஆகவே, ஒழுக்கம் கெட்ட தலைவர்களைச் சார்ந்து வாழ்வதை விடுத்து, ஒழுக்கம் நிறைந்த ஆன்மீகத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்வோம். அதுவே நமது வாழ்வில் உண்மையான ஒளியை ஏற்படுத்தும். ஒழுக்கமான ஆன்மீகத் தலைவர்கள் அதே சமயத்தில், உண்மையான தலைவர்களை நாடி ஆன்மீகப் பாதைக்கு வருபவர்கள், அங்கும் ஒழுக்கமற்ற தலைவர்களால் வழிநடத்தப்படும்போது, மிகவும் மனச்சோர்வு அடைகின்றனர். நல்ல ஆன்மீகத் தலைவர்கள் நமக்கு அவசியம். ஸம்பிரதாயங்கள் என்று அறியப்படும் முறையான குரு-சீடப் பரம்பரைகள் இதற்கு பாதுகாப்பாக அமைகின்றன. இஸ்கான் அமைப்பும் அத்தகைய குரு-சீடப் பரம்பரையில் வருவதால், இங்குள்ள தலைவர்கள் மற்றவர்களைவிட நிச்சயம் நம்பத்தகுந்தவர்களாக இருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்ரீல பிரபுபாதர் என்னும் உன்னத தலைவர் நம்முடன் இருக்கிறார். ஆகவே, சில நேரங்களில் சிறிய தலைவர்கள் ஏதேனும் தவறிழைத்தால்கூட, பிரபுபாதர் அமைத்துக் கொடுத்த இயக்கத்தின் நடைமுறைகளால், அவை சரிப்படுத்தப்படுகின்றன. குறைந்தபட்சம், “தனி மனித ஒழுக்கம் தலைவர்களுக்கு அவசியமில்லை” போன்ற மோசமான கருத்துகளுக்கு இங்கு இடமே இல்லை. Subscribe Digital Versionhttps://media.tamilbtg.com/uploads/2026/04/web007.webp எடுத்துக்காட்டாக வாழ்வோம் பெரிய தலைவர்களில் யாராவது இக்கட்டுரையைப் படிப்பார்களா என்று தெரியவில்லை; ஆயினும், முன்னரே கூறியபடி, ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நிலையில் தலைவர்களாக இருக்கிறோம். எனவே, நாம் ஒழுக்கத்துடன் செயல்பட்டால், நம்முடைய குழந்தைகள், உடன் வசிப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் என பலரும் நம்மால் ஈர்க்கப்படுவர்; காலப்போக்கில், ஒழுக்கத்திற்கான மதிப்பு உயரும்; அப்போது நாட்டின் தலைவர்களும் ஒழுக்கமான நிலைக்குத் திரும்ப வாய்ப்பு உள்ளது. ஆகவே, தாயாக, தந்தையாக, ஆசிரியராக, வயதில் பெரியவராக—எந்த நிலையில் நாம் இருந்தாலும்—தனி மனித ஒழுக்கத்தில் கவனமாக இருப்போம். ஒருபோதும் இதில் விட்டுக் கொடுக்காமல் வாழ்வோம். நாட்டின் சட்டம் அனுமதித்தாலும், இறைவனின் சட்டத்தை எப்போதும் கவனத்தில் வைத்து செயல்படுவோம். Subscribe Digital Versionhttps://media.tamilbtg.com/uploads/2026/04/keep_the_same_202604181607-copy-scaled.webp
புதுப்பிக்கப்பட்டது: 25 ஏப்ரல், 2026