முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ண உணர்வில் முக்தி

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 அக்டோபர், 2021 · ⏱️ 10 நிமிட வாசிப்பு

எழுத்து அளவு

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் பாவத்திலிருந்து தூய்மையடைதல் ஒருவன் எந்த அளவிற்கு நாம உச்சாடனத்தில் ஈடுபடுகின்றானோ, அந்த அளவிற்கு பல்வேறு வாழ்வில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள இருள் (அறியாமை) அகற்றப்படுகிறது. சேதோ-தர்பன-மார்ஜனம், நாமத்தை உச்சரிப்பதால் மனதின் கண்ணாடியிலுள்ள தூசியினைத் தூய்மைப்படுத்த முடியும், அதன் பின்னர், இருப்பவற்றை மிகவும் தெளிவாகக் காண முடியும். இவ்வாறாக, தான் யார், கடவுள் யார், இந்த உலகம் என்பது என்ன, இந்த உலகில் கடவுளுக்கும் நமக்கும் இடையிலான உறவு என்ன, இந்த உலகில் எவ்வாறு வாழ்வது, நம்முடைய மறுபிறவி எத்தகையது முதலியவற்றை ஒருவனால் அறிய முடியும். சுகதேவ கோஸ்வாமி களங்கமற்ற பக்தித் தொண்டை பரிந்துரைப்பதோடு மட்டுமின்றி, பக்தித் தொண்டின் மூலமாக பாவச் செயல்கள் அகற்றப்பட்டு விடுகின்றன என்றும் கூறுகிறார். நாம் ஒவ்வொருவரும் ஏறக்குறைய பாவிகளாகவே இருக்கின்றோம்; ஏனெனில், நாம் பாவிகளாக இருக்காவிடில் பௌதிக உடலினுள் வைக்கப்பட்டிருக்க மாட்டோம். பாவகரமான வாழ்விலிருந்து விடுதலை பெற்ற மாத்திரத்தில், ஒருவன் முக்தி பெற்று ஆன்மீக உடலில் ஆன்மீக உலகத்திற்கு மாற்றப்படுகிறான். ஒட்டுமொத்த வழிமுறையும் பாவகரமான பௌதிக வாழ்வின் களங்கத்திலிருந்து தூய்மைப்படுத்துவதற்கானதாகும். பக்குவமான அறிவு என்ன? கர்வத்தை மையமாகக் கொண்ட கூற்றுகளை அஹங்காரத்தினால் முன்வைக்காத வரையில், நாம் ஏற்கனவே முக்தி பெற்றவர்களாவோம். முக்தியை நாட வேண்டிய தேவை நமக்கு இல்லை. ஆனால், “நான் இந்த உடல்,” என்று நினைத்த மாத்திரத்தில், அவன் முக்தனாக இருப்பதில்லை, முக்தி என்றால், “நான் இந்த உடலிலிருந்து வேறுபட்ட ஆத்மா,” என்பதைப் பக்குவமாக உணர்வதாகும். எனவே, சுகதேவ கோஸ்வாமி கூறினார், ப்ராயஷ்சித்தம் விமர்ஷனம்:, “அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள், அஃது உங்களுக்கு விடுதலையைத் தரும்.” நாம் சின்னஞ்சிறு ஆன்மீகப் பொறிகள் என்பதையும், முழுமுதற் கடவுளாகிய பகவான் மிகப்பெரிய ஆன்மீக வஸ்து என்பதையும், அவரே நம்முடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றார் என்பதையும் (ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான்) உணர்ந்துகொள்ளும்போது, நம்முடைய அறிவு பக்குவமடைகிறது. நம்மை இறைவனின் சின்னஞ்சிறு அம்சங்களாக அறிந்துகொண்ட மாத்திரத்தில், அந்தக் கடவுளுக்கு தொண்டாற்றுவதே நமது கடமை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். கடவுளே எல்லாப் படைப்பின் மையமாவார், அவரே ஒட்டுமொத்த பிரபஞ்ச உடலின் மையமாவார்; அவரே அனுபவிப்பாளர், நாம் அனைவரும் அவரது சேவகர்கள். இந்த உணர்வு தெளிவாக இருக்குமெனில், நாம் முக்தி பெற்றவர்களாகிறோம். முக்தி என்றால் என்ன? முக்தி என்றால் எல்லா தவறான எண்ணங்களிலிருந்தும் விடுபட்டிருப்பதாகும். முக்தி பெற்றவுடன் பத்து கைகளைப் பெற்றுக்கொள்வதில்லை. ஸ்ரீமத் பாகவதத்தில் முக்தி என்பது பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது: முக்திர் ஹித்வான்யதா-ரூபம், முக்தி என்றால், வாழ்வின் தவறான எண்ணங்களை (ஆன்யதா-ரூபம்) கைவிடுவதாகும். அதாவது, ஒருவன் தன்னுடைய உண்மையான (ஸ்வரூப) தளத்தில் நிலைபெறும்போது, எல்லாத் தவறான எண்ணங்களையும் கைவிடும்போது, அவன் முக்தி பெற்றவனாகிறான். போதிய அறிவைப் பெறுவதன் மூலமாக ஒருவன் உடனடியாக முக்தி அடைகிறான் என்று ஸ்ரீமத் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ளது. அந்த எளிமையான அறிவை மிகவும் எளிதாக அடைய முடியும்: கடவுள் மிகப்பெரியவர், நான் மிகச்சிறியவன்; உன்னத உரிமையாளர் என்னும் நிலையில் அவர் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார், நான் அவரது சேவகன். இதற்கு எதிராக யாரால் சவால் விட முடியும்? இஃது உண்மை. நாம் எல்லாரும் பொய்யான முறையில் நம்மை இதுவாகவும் அதுவாகவும் அடையாளம் காண்கிறோம், அத்தகு பொய்யான அடையாளம் இறுதியில் நம்மையே இறைவனாக நினைக்கக்கூடிய மிகப்பெரிய தவறான அபிப்பிராயத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது. “நாம் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்?” என்பதை நாம் சிந்திப்பதே இல்லை. நமது உடலில் ஏதேனும் சிறிய கோளாறு ஏற்பட்டால்கூட நாம் மருத்துவரை அணுக வேண்டியுள்ளது. எனவே, தன்னையே கடவுளாக பிரகடனப்படுத்துபவன் மாயையின் இறுதி வலையில் விழுந்துவிட்டவனாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு வீழ்ச்சியுற்றுள்ள மனிதனால் முக்தியடைய முடியாது; ஏனெனில், அவன் தவறான அபிப்பிராயங்களினால் பந்தப்பட்டுள்ளான். முக்தி பெற்ற நிலையின் தன்மைகள் முறையான அறிவைப் பெறும்போது மட்டுமே ஒருவனால் உண்மையான முக்தியைப் பெற முடியும். முக்தி பெற்ற நிலையானது பிரம்ம-பூத நிலை என்றும் அறியப்படுகிறது. இந்த நிலையை அடைந்தவனை ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் பின்வருமாறு விளக்கியுள்ளார்: ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்-பக்திம் லபதே பராம் “இவ்வாறு தெய்வீகமாக நிலைபெற்றவன், உடனடியாக பரபிரம்மனை உணர்ந்து இன்பம் நிறைந்தவனாகின்றான். அவன் என்றும் கவலைப்படுவதில்லை, எதையும் அடைய வேண்டும் என்று விரும்புவதுமில்லை. எல்லா உயிர்வாழிகளிடமும் அவன் சமநோக்குகொள்கிறான். அத்தகு நிலையில் அவன் எனது தூய பக்தித் தொண்டை அடைகின்றான்.” (பகவத் கீதை 18.54) “தவறான அபிப்பிராயங்களினால் நான் பன்னெடுங்காலமாக மாயையில் இருந்தேன். நான் எவ்வளவு பெரிய முட்டாள்! நான் என்னையே கடவுளாக நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் நான் கடவுளின் நித்திய சேவகன் என்பதை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.” இதைப் புரிந்துகொண்ட மாத்திரத்தில் ஆனந்தம் ஏற்படுகிறது. இத்தகு உணர்வு நிலையை அடையப் பெற்றவன் முக்தி அடைகிறான், அவன் ப்ரஸன்னாத்மா, அதாவது மகிழ்ச்சியான ஆத்மாவாகிறான்; ஏனெனில், இதுவே ஜீவனின் உண்மையான நிலையாகும். கிருஷ்ணரின் பாதுகாப்பில் தூய உணர்வு நிலையில் ஒருவன் தன்னை ஒரு சிறிய பகுதியாகவும், முழுமுதற் கடவுளால் பாதுகாக்கப்படும் ஓர் ஆன்மீகப் பொறியாகவும் உணருவதால், அங்கே சோகத்திற்கான இடமே இல்லை. ஒரு சிறு குழந்தை தன்னுடைய தந்தையின் இருப்பில் தன்னை சுதந்திரமானவனாக உணர்கிறான். “என்னுடைய தந்தை அருகில் நின்று கொண்டிருப்பதால் நான் சுதந்திரமாக உள்ளேன். யாராலும் எனக்கு தீங்கிழைக்க முடியாது,” என்று அவன் நினைக்கிறான். அதுபோலவே, ஒருவன் கிருஷ்ணரிடம் சரணடையும்போது, கிருஷ்ணர் அவனைப் பாதுகாப்பதால், தனக்கு எந்த அபாயமும் இல்லை என்பதில் அவன் பூரண நம்பிக்கை கொண்டுள்ளான். கிருஷ்ணரிடம் அவ்வாறு சரணடைந்துள்ளவன் எந்தவொரு வருத்தத்திற்கோ ஆசைக்கோ உட்பட்டவன் அல்லன்; இறையுணர்வு இல்லாத மனிதனோ எப்போதும் வருத்தத்திலும் ஏக்கத்திலும் வாழ்கிறான். அவன் தன்னிடம் இல்லாதவற்றிற்காக ஏங்குகிறான், தன்னால் தொலைக்கப்பட்டவற்றிற்காக வருந்துகிறான். இறையுணர்வுள்ள மனிதன் இதுபோன்ற துன்பங்களுக்கு உட்படுவதில்லை. ஏதேனும் இழக்கப்பட்டுவிட்டால், அதனை அவன் கடவுளின் விருப்பமாக நினைக்கின்றான். “இது கடவுளின் விருப்பம் என்பதால், இதுவும் நன்மையே,” என்று அவன் நினைக்கின்றான். தன்னுடைய எல்லாத் தேவைகளும் உன்னத தந்தையான கிருஷ்ணரால் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதை அவன் அறிந்துள்ளதால், அவன் எதற்காகவும் ஆசைப்படுவதில்லை. நற்குணம் கொண்ட கிருஷ்ண பக்தன் இறைவனுடனான தனது உறவைப் புரிந்து கொண்ட மாத்திரத்தில் ஒருவன் உலகளாவிய சகோதரத்துவத்தை உணர்கிறான்; ஏனெனில், மனிதர்கள், விலங்குகள் மட்டுமின்றி, எல்லா உயிர்வாழிகளும் பரம உண்மையின் அம்சங்களே என்பதால், அவர்கள் அனைவருமே சமமானவர்கள் என்பதை அவன் புரிந்துகொள்கிறான். இத்தகு பார்வையைப் பெற்றுள்ளவன் மற்ற உயிர்வாழிகளிடம் பொறாமை கொள்வதில்லை, அவர்களை வஞ்சிப்பதோ அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதோ இல்லை. இவ்வாறாக, கிருஷ்ண பக்தனாக இருப்பவன் முறையான உணர்வில் இருப்பதால், எல்லா நற்குணங்களையும் வளர்த்துக்கொள்கிறான், ஹராவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குணா மனோ-ரதேனாஸதி தாவதோ பஹி:. கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொண்டுள்ளவன் தேவர்களுடைய எல்லா நற்குணங்களையும் வெளிப்படுத்துவான். எனவேதான், வைஷ்ணவன் இவ்வாறு கூறப்படுகிறான், வாஞ்சா-கல்ப-தருப்யஷ் ச க்ருபா-ஸிந்துப்ய ஏவ ச, வைஷ்ணவன் அல்லது கிருஷ்ண பக்தன் என்பவன் மற்றவர்களுக்கு கருணையின் கடலாக இருக்கின்றான். அவன் இறையுணர்வை அவசியமாக தேடிக் கொண்டுள்ள சமுதாயத்திற்கு மிகவுயர்ந்த பரிசை வழங்குகிறான். வைஷ்ணவன் விலைமதிப்பற்ற பரிசாகிய மஹா மந்திரத்தை வழங்குகிறான்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. இந்த மந்திரத்தை உச்சரிப்பதாலேயே, ஒருவன் முக்தி பெற்ற நிலையை அடைய முடியும். முக்தி நிலையில் தொண்டாற்றுதல் அதே சமயத்தில், முக்தி பெற்ற இந்நிலையினை வெறுமனே ஸமாதியில் ஏதோவொரு மூலையில் எல்லையற்ற நாள்களாக பத்மாஸனத்தில் அமர்ந்திருக்கக்கூடிய நிலை என்று நினைத்து விடக் கூடாது. இல்லை, முக்தி என்றால் சேவை செய்வதாகும். “நான் தற்போது என்னுடைய வாழ்க்கையை கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து விட்டேன், இப்போது நான் ஸமாதியில் அமர்ந்துகொள்கிறேன்,” என்று கூற முடியாது. சரணாகதியின் மதிப்பானது சேவையின் மூலமாக (நிஷேவயா) தக்க வைக்கப்படுகிறது. முழுமுதற் கடவுளுக்குத் தொண்டாற்றும்போது, அவர் தம்மை பக்தனது இதயத்தினுள் வெளிப்படுத்துகிறார். பகவானுக்கான பக்தித் தொண்டு காலையிலிருந்து இரவு வரை ஆற்றப்படுகிறது. உண்மையில், ஒருவன் கிருஷ்ணருக்கான பக்தித் தொண்டில் இருபத்துநான்கு மணிநேரமும் ஈடுபட வேண்டும் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. ஏதோ பதினைந்து நிமிடங்கள் தியானம் செய்துவிட்டு அதன் பின்னர் எல்லா வகையான அபத்தங்களிலும் ஈடுபடலாம் என்று நினைத்து விடக் கூடாது. நாம் எந்த அளவிற்கு அதிகமாக தொண்டாற்றுகின்றோமோ, அந்த அளவிற்கு நாம் கிருஷ்ணரிடம் அதிகமாக சரணடைகிறோம்; எனவே, ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் எல்லா திறன்களையும் கிருஷ்ணருக்காகப் பயன்படுத்த வேண்டும். கேட்டல், உரைத்தல், நினைத்தல், தொண்டாற்றுதல், கோயிலிலுள்ள விக்ரஹத்தை பூஜித்தல், பிரார்த்தித்தல், கட்டளைகளை நிறைவேற்றுதல், நண்பனாக பகவானுக்கு தொண்டாற்றுதல், அனைத்தையும் அவருக்காக அர்ப்பணித்தல் என பக்தித் தொண்டில் ஒன்பது வழிமுறைகள் உள்ளன, இந்த ஒன்பது வழிமுறைகளில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒன்றில் ஒருவன் தன்னை எப்போதும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கிருஷ்ணரின் தொண்டில் வெறுப்பு உண்டா? கிருஷ்ணரின் தொண்டில் எப்போதும் ஈடுபட்டிருப்பவன் ஒருபோதும் வெறுப்படைவதில்லை (பஜதா ப்ரீதி-பூர்வகம்). தொண்டு என்பது அன்புடன் ஆற்றப்படுவதாகும், ஆனால் ஆரம்ப நிலையில் அது சிரமமாக இருக்கலாம் என்பதால், சில நேரங்களில் ஒருவன் வெறுப்படையலாம். இருப்பினும், கிருஷ்ணரின் தொண்டில் முன்னேற்றத்தைக் காணும்போது, இது மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை அவனால் காண முடியும். பகவத் கீதையில் கிருஷ்ணர் இதனைச் சுட்டிக்காட்டுகிறார்: யத் தத் அக்ரே விஷம் இவ பரிணாமே ’ம்ருதோபமம் தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் ஆத்ம-புத்தி-ப்ரஸாத-ஜம் “ஆரம்பத்தில் விஷத்தைப் போன்று இருந்தாலும் இறுதியில் அமிர்தத்தைப் போன்றதும், தன்னுணர்விற்கு ஒருவனை எழுப்புவதுமான சுகம், ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.” (பகவத் கீதை 18.37) ஒருவன் ஒருமுறை ஆன்மீகத் தளத்தை அடைந்துவிட்டால், பௌதிகத் தொண்டுகள் அனைத்திலும் அவன் வெறுப்படைகிறான். உதாரணமாக, வாழ்நாள் முழுவதும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பவன் அந்த நாமங்களின் மீது சலிப்படைவதில்லை; மாறாக, அவன் ஏதேனும் பௌதிகப் பெயரை மீண்டும்மீண்டும் உச்சரிக்க நேர்ந்தால், அவன் விரைவிலேயே வெறுப்படைந்து விடுவான். கிருஷ்ணருடைய நாமங்களை எந்த அளவு அதிகமாக உச்சரிக்கின்றானோ, அந்த அளவிற்கு கிருஷ்ணரிடம் பற்றுதல்கொள்கிறான். இவ்வாறாக, ஸ்ரவணம், கீர்த்தனம் (கிருஷ்ணரைப் பற்றி கேட்டல், உரைத்தல்) என்னும் தொண்டே ஆரம்பமாகும். அடுத்த வழிமுறை ஸ்மரணம் எனப்படுகிறது, கிருஷ்ணரைப் பற்றி எப்போதும் நினைத்திருத்தல். ஒருவன் கேட்பதிலும் புகழ்வதிலும் பக்குவமடையும்போது, அவன் எப்போதும் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டிருப்பான். இந்த மூன்றாவது நிலையில், அவன் மிகப்பெரிய யோகியாகிறான். கிருஷ்ண பக்தியில் இழப்பு இல்லை கிருஷ்ண உணர்வில் அடையப்படும் முன்னேற்றம் ஒருபோதும் இழக்கப்படுவதில்லை. பௌதிக உலகில், ஒருவன் ஏதேனும் ஒரு தொழிற்சாலையினை அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு, ஒருவேளை அதனை அவனால் நிறைவு செய்ய முடியாவிடில், அந்தத் தொழிற்சாலை எந்தவொரு நன்மையையும் வழங்காமல் பயனற்றதாகி விடும். கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டு கட்டிடம் பாதியில் இருக்குமெனில், அதில் செலவழிக்கப்பட்ட பணம் மொத்தமும் நஷ்டமாகிறது. கிருஷ்ண உணர்வின் நிலை இதுபோன்றதல்ல; ஏனெனில், ஒருவன் பக்குவத்தின் தளத்தினை அடையாவிட்டால்கூட, அவன் செய்த பணிகள் யாவும் அவனது நிரந்தர சொத்தாகின்றன, அவன் அந்த நிலையிலிருந்து தனது மறுபிறவியினைத் தொடங்கலாம். கிருஷ்ணரும் இதனை பகவத் கீதையில் உறுதிப்படுத்துகிறார், கிருஷ்ண உணர்வினை தொடங்கியவன் ஒருபோதும் எதையும் இழப்பதில்லை: நேஹாபிக்ரம-நாஷோ ’ஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் “இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகவும் பயங்கரமான அபாயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.” (பகவத் கீதை 2.40) வெற்றியடையாத யோகி தனது மறுபிறவியில் தான் கைவிட்ட இடத்திலிருந்து கிருஷ்ண உணர்வின் பயிற்சியினை மீண்டும் தொடங்குவதாக பகவான் பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயத்தில் சுட்டிக்காட்டுகிறார். வேறுவிதமாகக் கூறினால், ஒருவன் கிருஷ்ண உணர்வின் வழிமுறையினை இப்பிறவியில் 50 விழுக்காடு நிறைவேற்றியிருந்தால், அவன் தனது மறுபிறவியில் 51ஆவது விழுக்காட்டிலிருந்து அதனைத் தொடங்குகிறான். நம்முடைய இப்பிறவியில் நாம் எவ்வளவு பௌதிகச் சொத்துக்களைச் சேகரித்தாலும், அவை அனைத்தும் மரணத்தின்போது அழிக்கப்படுகின்றன, நம்மால் பௌதிகச் செல்வத்தை மறுபிறவிக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதே சமயத்தில், என்னுடைய மறுபிறவியில் கிருஷ்ண உணர்வை அடைவேன் என்றும், அதற்காக காத்திருப்பேன் என்றும் ஒருவன் நினைக்கக் கூடாது. நாம் கிருஷ்ண உணர்வின் திருப்பணியினை இப்பிறவியிலேயே நிறைவேற்றுவதற்கு முயல வேண்டும். தம்முடைய பக்தனாகுபவன் ஐயமின்றி தம்மையே அடைவதாக கிருஷ்ணர் நமக்கு வாக்குறுதி அளிக்கிறார்: மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோ ’ஸி மே “எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்வாறு செய்வதினால் நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கின்றேன்.” (பகவத் கீதை 18.65) கிருஷ்ணரின் மீதான தூய அன்பு கிருஷ்ணரிடம் செல்கிறோம் என்று கூறப்படும் போது, அங்கே நாம் ஏதோ ஒரு சூன்யத்தைப் போன்று நின்று கொண்டிருப்போம் என்றோ பிரகாசமான அருவ ஜோதியைப் போன்று வீற்றிருப்போம் என்றோ நினைத்து விடக் கூடாது. நம்மைப் போன்றே கடவுளாகிய கிருஷ்ணரும் ஒரு நபரே. பௌதிகமான முறையில், நம்முடைய தந்தை ஒரு நபர் என்பதையும், அவருடைய தந்தை ஒரு நபர் என்பதையும், அவருடைய தந்தையின் தந்தையும் ஒரு நபரே என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறே சென்றால், உன்னத தந்தையாகிய இறைவனும் ஒரு நபராகவே இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமானதல்ல. பலனை எதிர்பார்த்து செயல்படுவோர், அனுமானத்தில் ஈடுபடுவோர், சித்திகளைப் பெற்றுள்ள யோகிகள் ஆகியோரைக் காட்டிலும் கிருஷ்ண பக்தர்கள் உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். தூய அன்பினைப் பெற்றுள்ள பக்தனைத் தவிர மற்றவர்கள் அனைவரிடமும் ஆசைகள் இருப்பதால், பக்தனால் மட்டுமே பக்குவ அமைதியை அடைய முடியும், மற்றவர்களால் இயலாது. தூய பக்தன் கிருஷ்ணருக்குத் தொண்டாற்றுவதாலேயே மகிழ்ச்சி அடைகிறான் என்பதால், அவன் ஆசைகளற்றவனாக இருக்கின்றான். கிருஷ்ணர் கடவுளா இல்லையா என்பதைக்கூட அவன் அறிவதில்லை அல்லது பொருட்படுத்துவதில்லை; அவன் கிருஷ்ணரிடம் அன்பு செலுத்த மட்டுமே விரும்புகிறான். கிருஷ்ணர் சர்வ சக்தி உடையவரா எங்கும் வீற்றிருப்பவரா என்பன போன்ற உண்மைகளையும் அவன் பொருட்படுத்துவதில்லை. விருந்தாவனத்திலுள்ள இடையர் குலச் சிறுவர்களும் கோபியர்களும் கிருஷ்ணர் கடவுளா இல்லையா என்பதை அறிந்திருக்கவில்லை, ஆனால் அவர்கள் அவரை மிகவும் நேசித்தனர். அவர்கள் வேதாந்திகளாக, யோகிகளாக அல்லது கர்மிகளாக இருக்கவில்லை என்றபோதிலும், கிருஷ்ணரைக் காண விரும்பிய எளிமையான கிராமத்து பெண்களாகவும் ஆண்களாகவும் இருந்த காரணத்தினால், அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். மிகவும் முன்னேறிய இந்த நிலையானது ஸர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம் எனப்படுகிறது; அதாவது, எல்லா பௌதிக அடையாளங்களிலிருந்தும் விடுதலை பெற்ற தூய்மையான நிலையாகும்.

புதுப்பிக்கப்பட்டது: 18 டிசம்பர், 2024

← முகப்பு