முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீல பிரபுபாதர்

தலைசிறந்த ஓவியர்

Tulasipati · 6 செப்டம்பர், 2021 · ⏱️ 8 நிமிட வாசிப்பு

எழுத்து அளவு

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 1973 பிப்ரவரியில், ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள், நியூஸிலாந்தில் உள்ள ஆக்லாந்து ஓவியக்கூடத்தில் உரையாற்றிட அழைக்கப்பட்டார். அங்கு தலைசிறந்த ஓவியரான கிருஷ்ணரின் படைப்பினைப் பற்றி சிந்திக்கும்படி கூட்டத்தினரைத் தூண்டினார்.

கிருஷ்ணர் எதையும் செய்ய வேண்டியதில்லை

தாய்மார்களே! கனவான்களே! தலைசிறந்த ஓவியர் யார் என்பதுகுறித்து உரையாற்ற எங்களுக்கு வாய்ப்பளித்தமைக்கும் இதைக் கேட்க வந்தமைக்கும் மிக்க நன்றி. கிருஷ்ணரே தலைசிறந்த ஓவியர் என்று வேதங்கள் கூறுகின்றன, ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத்-ஸமஷ் சாப்யதிகஷ் ச த்ருஷ்யதே. புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளுக்கு மேலாகவோ இணையாகவோ எவரும் இல்லை. மேலும், அவரே தலைசிறந்த ஓவியர் என்பதால் அவர் செய்ய வேண்டிய செயல் என்று எதுவுமில்லை. இந்த உலகில் சிலர் நம்மைவிடத் தாழ்ந்தவராகவும், சிலர் நமக்கு சமமானவராகவும், சிலர் நம்மைவிட உயர்ந்தவராகவும் இருப்பதை அனுபவத்தில் காண்கிறோம். நீங்கள் எவ்வளவு சிறந்தவராக இருப்பினும் உங்களுக்கு சமமானவரையோ உங்களைவிட சிறந்தவரையோ நீங்கள் காண்பது உறுதி. ஆனால், புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளைவிட உயர்ந்தவரோ அவருக்கு சமமானவரோ எவருமில்லை என்று மிகச்சிறந்த சாதுக்கள் தீர்மானித்துள்ளனர். பகவானுக்கு தாம் ஆற்ற வேண்டிய கடமையோ அதற்கான கட்டாயமோ எதுவுமில்லை என்பதே அவரது சிறப்புத் தன்மையாகும். (ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே). ஏன்? பராஷ்ய ஷக்திர் விவிதைவ ஷ்ருயதே, அவருடைய எண்ணற்ற சக்திகள் அனைத்தும் அவருடைய விருப்பத்தின்படி இயல்பாகச் செயல்படுகின்றன. (ஸ்வாபாவிகீ ஜ்ஞான-பல-க்ரியா ச).

தலைசிறந்த ஓவியர்

நீங்கள் மிக அழகான ரோஜா ஒன்றினை வரைய விரும்பினால், தூரிகை ஒன்றை எடுத்துக் கொண்டு, தட்டில் வண்ணங்களை கலந்து, மூளையைக் கசக்கி ரோஜாவை அழகுபடுத்த வேண்டும். ஆனால், தோட்டத்திலோ ஆயிரக்கணக்கான ரோஜாக்கள் மலர்ந்திருப்பதைக் காணலாம். இவை இயற்கையினால் வண்ணம் தீட்டப்பட்ட மிக அற்புதமான ஓவியங்களாகும். இந்த விஷயத்தை நன்கு ஆராய வேண்டியது அவசியம். இயற்கை என்பது ஒரு கருவி அல்லது சக்தி மட்டுமே. எந்தவித சக்தியும் இல்லாமல் மொட்டிலிருந்து அழகான ரோஜா எவ்வாறு மலர முடியும்? ஏதோவொரு சக்தியின் செயல்பாடு இருந்தேயாக வேண்டும். அதுவே கிருஷ்ணரின் சக்தியாகும். ஆனால், அச்சக்தி மிகவும் சூட்சுமமாகவும் விரைவாகவும் செயல்படுவதால், அஃது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, கிருஷ்ணரே தலைசிறந்த ஓவியர். இன்றைய மின்னணு யுகத்தில், பொத்தானை அழுத்தினாலே இயந்திரம் மிக அருமையாகச் செயல்படுகிறது. விமானி பொத்தானை அழுத்துவதால் சிறு நகரம் போன்றதான விமானம் ஆகாயத்தில் பறக்கின்றது. சாதாரண மனிதனே இவ்வளவு அருமையாகச் செயல்பட முடியுமென்றால், இறைவனின் செயல்படும் திறன் எவ்வளவு சிறந்ததாக இருக்க வேண்டும்? அவரது மூளையானது ஒரு சாதாரண கலைஞன் அல்லது விஞ்ஞானியின் மூளையைக் காட்டிலும் எவ்வளவு மேம்பட்டதாக இருக்க வேண்டும். வெறுமனே “படைப்பு உண்டாகட்டும்!” என்று அவர் விரும்பியதும் அனைத்தும் உடனடியாகப் படைக்கப்படுகின்றன. எனவேதான், கிருஷ்ணர் தலைசிறந்த கலைஞர் அல்லது தலைசிறந்த ஓவியர் எனப்படுகிறார். https://media.tamilbtg.com/uploads/2021/10/5.jpg பிரபஞ்சத்தைப் படைக்கும் பிரம்மதேவர் தமது பிரார்த்தனையான பிரம்ம சம்ஹிதையில், மிகச்சிறந்த ஓவியரான கிருஷ்ணரைப் பற்றி பல்வேறு விதங்களில் பாராட்டியுள்ளதை நாம் காணலாம்.

கிருஷ்ணருக்கு இணையான கலைஞன் உண்டோ!

பெளதிக சக்திகள் தன்னிச்சையாகச் செயல்படுவதைப் போன்று தோன்றினாலும், அதன் பின்னால் ஒரு மூளையின் செயல்பாடு இருப்பது உண்மையே. ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுகையில், நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை அனைவராலும் பார்க்க முடிவதுபோலவே, உண்மையான ரோஜாவிற்கு பற்பல சக்திகள் வண்ணம் தீட்டியுள்ளன. ரோஜாவானது பரம புருஷரின் சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சக்திகள் மிகவும் சூட்சுமமாகவும் மிகுந்த கலைத் திறனுடனும் இருப்பதால், ஒரே இரவிற்குள் அற்புதமான அழகிய மலர்கள் பூத்துவிடுகின்றன.

கிருஷ்ணருடைய கலைநயத்திற்கு எல்லையே இல்லை. ஏனெனில், கிருஷ்ணரே எல்லா படைப்பிற்கும் விதையளிக்கிறார். பீஜம் மாம் ஸர்வ-பூதானாம். நீங்கள் ஆலமரத்தினைப் பார்த்திருப்பீர்கள். மிகச்சிறிய விதையிலிருந்து மிகப்பெரிய மரமாக வளருகிறது. செழிப்பான நிலத்தில் அச்சிறிய விதையை விதைத்து நீரூற்றி வந்தால், ஒருநாள் அது மிகப்பெரிய ஆலமரமாக உருவெடுக்கும். ஒரு சிறிய விதை இவ்வளவு பெரிய ஆலமரமாக உருவெடுக்க வேண்டுமெனில், அதற்கான சக்திகளும் கலைத்திறனும் விஞ்ஞான ஏற்பாடும் எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும்? மேலும், அந்த ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான பழங்கள் உள்ளன; அப்பழங்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான விதைகள் உள்ளன. அந்த ஒவ்வொரு விதையும் ஓர் ஆலமரத்தினை தோற்றுவிக்கும் சக்தியைக் கொண்டுள்ளன. இதனை இவ்வளவு அருமையாக உருவாக்கிய விஞ்ஞானி யார்? இதுபோன்ற படைப்பினை உருவாக்கும் கலைஞர் எவரேனும் இப்பெளதிக உலகில் உள்ளனரா?

தலைசிறந்த விஞ்ஞானி

வேதாந்த சூத்திரத்தின் முதல் வாக்கியம், அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸ, “மனித வாழ்வைப் பெற்றவர் பூரண உண்மையைப் பற்றி ஆய்ந்தறிய வேண்டும்.” இவற்றை ஒருவன் கவனத்துடன் கற்க வேண்டும். இதிலிருந்து இயற்கையின் பின்னணியில் கலைநயமிக்க ஓவியர் அல்லது மிகப்பெரிய விஞ்ஞானியின் மூளை இருக்கின்றது என்பதை உங்களால் மறுக்க முடியாது; இயற்கையின் ‍செயல்பாடே இதற்கு காரணம் என்று கூறுவது முழுமையான விளக்கமாகி விடாது.

ஜன்மாத்யஸ்ய யத:, “பூரண உண்மையிடமிருந்தே அனைத்தும் படைக்கப்படுகின்றன,” என்பதே வேதாந்த சூத்திரத்தின் இரண்டாவது வாக்கியம். பார்வையை நாம் விசாலப்படுத்த வேண்டும். ஸ்புட்னிக் எனும் சிறு விண்கலம் வானில் பறப்பதை பார்த்து ஆச்சரியமடைகிறோம். நீங்கள் புத்திசாலியாக இருந்தால், ஸ்புட்னிக்குடன் கோடிக்கணக்கான கோள்களையும் நட்சத்திரங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள். இந்த பூமியின் சமுத்திரங்கள், மலைகள், வானளாவிய கட்டிடங்கள் முதலியவற்றை வானில் சில மைல் தூரம் மேலே சென்று பார்த்தால், ஒரு புள்ளியைப் போலவே காட்சியளிக்கும்.

அதுபோலவே, இலட்சக்கணக்கான கிரகங்கள் வானில் ஒரு பஞ்சைப் போன்று மிதந்து கொண்டுள்ளன. ஒரு ஸ்புட்னிக்கை தயாரித்த விஞ்ஞானியை நாம் இவ்வளவு பாராட்டுகிறோம்; இவ்வாறு இருக்கையில், வியத்தகு பிரபஞ்சங்களைப் படைத்தவருக்கு நாம் எவ்வளவு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும்? தலைசிறந்த ஓவியரையும் தலைசிறந்த விஞ்ஞானியையும் பாராட்டும் இவ்வுணர்வே கிருஷ்ண உணர்வாகும்.

https://media.tamilbtg.com/uploads/2021/09/6.jpg ஸ்ரீமதி ராதாராணியே கிருஷ்ணருடைய ஆனந்த சக்தியின் தோற்றமாவாள்.

அனைத்திற்கும் ஆதியான கிருஷ்ணர்

நாம் பல்வேறு ஓவியர்களைப் பாராட்டினாலும் மிகச்சிறந்த ஓவியரான கிருஷ்ணரைப் பாராட்டவில்லை என்றால், நமது வாழ்வே அர்த்தமற்றதாகிவிடும். இத்தகைய பாராட்டுதலை பிரபஞ்சத்தைப் படைக்கும் பிரம்மதேவரின் பிரார்த்தனையான பிரம்ம சம்ஹிதையில் (5.40) காண்கிறோம். கோடிக்கணக்கான பிரபஞ்சங்களைப் பற்றிய அறிவை பிரம்ம சம்ஹிதையிலிருந்து நாம் பெறுகிறோம். யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி- கோடிஷ்வஷேஷ-வஸுதாதி-விபூதி-பின்னம் தத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அஷேஷ-பூதம் கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி கிருஷ்ணரின் உடலிலிருந்து வெளிப்படும் பிரம்மஜோதியிலிருந்து எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள் படைக்கப்படுகின்றன. ஜகத் அண்ட கோடி கோடிஷு. ஜகத் அண்ட என்றால் “பிரபஞ்சங்கள்” என்றும், கோடி கோடிஷு என்றால் “கோடிக்கணக்கானவை” என்றும் பொருள்படு கின்றன. இந்த எண்ணிலடங்காத பிரபஞ்சங்களிலுள்ள எண்ணிலடங்காத சூரிய, சந்திரன்கள், எண்ணற்ற கிரகங்கள் என அனைத்தும் பிரம்மஜோதியிலிருந்தே தோன்றுகின்றன. அந்த பிரம்மஜோதி கிருஷ்ணருடைய திருமேனியின் பிரகாசமாகும். தங்களுடைய துளியளவு மூளையைக் கொண்டு அனுமானத்தினால் பரமனை அணுக முயலும் ஞானிகளால் இந்த பிரம்மஜோதியை மட்டுமே அடைய முடியும். பிரம்மஜோதிக்கு ஆதியான கிருஷ்ணரை அவர்களால் அடைய முடியாது. சூரிய ஒளி இதற்கு ஒரு சிறந்த உவமையாகும். சூரிய ஒளியானது சூரியனிலிருந்து வருகின்றது. சூரியன் ஓரிடத்திலிருந்தாலும், அதன் ஒளியானது பிரபஞ்சம் முழுவதும் பரவுகின்றது. நிலவு எவ்வாறு சூரியனின் ஒளியினைப் பிரதிபலிக்கின்றதோ, அதுபோல சூரியனும் பிரம்மஜோதியினைப் பிரதிபலிக்கின்றது. அந்த பிரம்மஜோதி கிருஷ்ணரது திருமேனியின் ஒளியாகும்.

கிருஷ்ணரே பரம ஆளுநர்

ஆகையால், கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதே எல்லா கலைகளிலும் தலைசிறந்த கலையாகும். நாம் ஒரு கலைஞனாக இருக்க விரும்பினால், அவரைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அதாவது, தலைசிறந்த கலைஞரான கிருஷ்ணருடன் நெருக்கமான முறையில் உறவுகொள்ள முயல வேண்டும். இந்த காரணத்திற்காகவே, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினை யாம் நிறுவியுள்ளோம். முறையான பயிற்சியை மேற்கொள்ளும் இவ் வியக்கத்தின் உறுப்பினர்களால், கிருஷ்ணருடைய கலைத்திறனின் வெளிப்பாட்டை அனைத்திலும் காண முடிகிறது. அனைத்து இடங்களிலும் கிருஷ்ணருடைய கலைத்திறனைக் காண்பதே கிருஷ்ண உணர்வாகும்.

பகவத் கீதையில் [10.8] அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே, “நீ காண்பவை அனைத்தும் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இருப்பவை அனைத்தும் எனது சக்தியால் படைக்கப்படுபவையே,” என்று கிருஷ்ணர் கூறுகிறார். கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலாதாரம் என்னும் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரம்மதேவரும் தமது பிரம்ம சம்ஹிதையில் [5.1] இதனை உறுதிப்படுத்துகிறார்; ஈஷ்வர: பரம: க்ருஷ்ண:, “கிருஷ்ணரே மிகவுயர்ந்த ஆளுநர்.” இந்த பெளதிக உலகில் நாம் பல ஆளுநர்களைக் காண்கிறோம். உண்மையில், நம்மில் ஒவ்வொருவரும் ஆளுநர்களே. நீங்களும் ஓர் ஆளுநர், ஆனால் உங்களுக்கு மேலே மற்றோர் ஆளுநர் இருக்கின்றார், அவருக்கும் மேல் மற்றொருவர் என ஆராய்ந்து கொண்டே போனால், இறுதியில் எவராலும் கட்டுப்படுத்த முடியாதவரும், அனைவரையும் கட்டுப்படுத்துபவருமான பரம ஆளுநரைக் காண முடியும். அந்த பரம ஆளுநரே பகவான் கிருஷ்ணர். இதுவே கடவுள் என்பதற்கு யாம் அளிக்கும் விளக்கமாகும்.

தற்போது, பற்பல கடவுள்களை உருவாக்குவது ஒரு மலிவான வியாபாரமாக மாறிவிட்டது. ஆனால் அவர்கள் உண்மையான கடவுளா என்பதை நீங்கள் பரிசோதித்துப் பார்க்க முடியும். அவர் யாருக்காவது கட்டுப்பட்டவராக இருந்தால், அவர் கடவுள் இல்லை; அவர் பரம அதிகாரியாக இருந்தால் மட்டுமே, அவரைக் கடவுளாக ஏற்கலாம். இதுவே கடவுளுக்கான எளிய பரிசோதனை.

ஆனந்தமயமானவர் (ஆனந்தமயோ ’ப்யாசாத்) என்பது கடவுளின் மற்றொரு தகுதியாகும். பரம புருஷ பகவான் இயற்கையாகவே ஆனந்தமயமானவர்; இன்பமயமானவர். ஓவியர் தனது ஓவியத்தை இன்பத்திற்காகவே மேற்கொள்கிறார். வரைவதன் மூலமாக அவர் ஒருவித சுவையையும் இன்பத்தையும் அனுபவிக்கின்றார்; இல்லையெனில், அவர் அவ்வளவு சிரமத்தை எதற்காக மேற்கொள்ள வேண்டும்?

கிருஷ்ணரிடம் அன்பை வளர்ப்போம்

கடவுளின் மீதான அன்பை வளர்த்துக் கொண்டவர்கள் கிருஷ்ணருடைய கலைத்திறனை அனைத்து இடங்களிலும் கண்டு உன்னத ஆனந்தத்தை அடைகின்றனர். இதுவே பக்தர்களின் நிலையாகும். எனவே, கிருஷ்ணரின் கைவண்ணத்தை எங்கும் காண்பதற்காகவே அனைவரையும் கிருஷ்ண உணர்வுள்ள பக்தராகும்படி நாங்கள் வேண்டுகிறோம். கிருஷ்ணரை எங்கும் காண்பது கடினமல்ல. உதாரணமாக, ஒருவர் தாகம் எடுக்கும்போது நீர் அருந்துகிறார். அப்படி அருந்தும்போது அவர் அளவற்ற இன்பத்தினை உணர்கிறார். உண்மையில், கிருஷ்ணரே இன்பத்தின் இருப்பிடம் (ரஸோ வை ச:), கிருஷ்ணர் கனிந்த ஆனந்தங்களின் இருப்பிடமாவார். அவர் ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ, நித்தியத்துவம், அறிவு மற்றும் ஆனந்தத்தினை முழுமையாகக் கொண்டவர். (ஆனந்த என்றால் “இன்பம்” என்று பொருள்) அவருடைய இன்பத்தின் சக்தியே ராதாராணி. நீங்கள் ராதா-கிருஷ்ணரின் படங்களைப் பார்த்திருப்பீர். ராதாராணி கிருஷ்ணரின் ஆனந்த சக்தியின் தோற்றமாவாள். நான் ஏற்கனவே கூறிய கிருஷ்ணரின் பற்பல சக்திகளுள், ராதாராணியே அவரது ஆனந்த சக்தியாக இருக்கின்றாள். கிருஷ்ணர் பகவத் கீதையில் (7.8), ரஸோ ’ஹம் அப்ஸு கௌந்தேய, “நீரிலுள்ள சுவை நானே,” என்று கூறுகிறார். எனவே, நீரைப் பருகும்போது ஒருவர் உணரும் இன்பமும் கிருஷ்ணரே. கிருஷ்ணரைப் பாராட்ட முடியாத சாதாரண மனிதனுக்காக தாகத்தைத் தணிக்கும் நீரின் சுவை தாமே என்று அவர் உபதேசிக்கிறார். நீரின் சுவை கிருஷ்ணரே என்பதை புரிந்துகொள்ள முயற்சித்தால், கடவுள் உணர்வை, கிருஷ்ண உணர்வை அடையலாம்.

கிருஷ்ண உணர்வு மிகவும் எளிதானது

கிருஷ்ண உணர்வை அடைவது அவ்வளவு கடினமல்ல. சிறிதளவு பயிற்சியே தேவை. கிருஷ்ணர் கூறிய உபதேசங்களை அயோக்கியர்களின் தவறான கருத்துகள் ஏதுமின்றி உள்ளபடி ஏற்கும்போது, நீங்கள் கிருஷ்ண உணர்வினை அடைவீர்கள். கிருஷ்ண உணர்வை அடைந்தால் வாழ்க்கை வெற்றி பெறும்; நீங்கள் கிருஷ்ணரிடம் திரும்புவீர்கள் (த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி).

கிருஷ்ண உணர்வை அடைவதால் எந்த இழப்பும் இல்லை, அடையப்படும் பலனோ அபரிமிதமானது. எனவே, கிருஷ்ண உணர்வைப் பெற முயலுங்கள் என்று உங்கள் அனைவரையும் ‍வேண்டுகிறோம். பகவத் கீதை உண்மையுருவில் நூலைப் படிப்பதன் மூலமாக கிருஷ்ண உணர்வைப் பெறுவதற்கான எல்லா தகவல்களையும் பெற இயலும். ஒருவேளை நீங்கள் பகவத் கீதையைப் படிக்க விரும்பவில்லை என்றால்கூட, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரியுங்கள். இதன் மூலமும் நீங்கள் கிருஷ்ண உணர்வைப் பெறுவது உறுதி.

நன்றி, வணக்கம்.

புதுப்பிக்கப்பட்டது: 21 டிசம்பர், 2024

← முகப்பு