தொழிற்சாலைகளின் உண்மையான விளைவு
தொழிற்புரட்சி—கி.பி. 1760களில் ஏற்பட்டு, சுமார் 60 முதல் 80 ஆண்டுகள் நீடித்தது. மனிதர்கள் உழைப்பினால் செய்து வந்த உற்பத்தியை கருவிகளைக் கொண்டு செய்யத் தொடங்கினர். அதன் விளைவாக, தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள் என பல நிலைகளில் உலகம் வளர்ந்துள்ளது. இவற்றிற்கு முத்தாய்ப்பாக, கணிப்பொறி பயன்பாட்டிற்கு வந்த பின்பு அனைத்து தொழில்களும் வெகு வேகமாக வளர்ந்துள்ளன. தொழிற்சாலைகள் பல கோடி மக்களுக்கு நிரந்தர வருமானத்தை வழங்குவதாகவும் மக்களின் தேவைகள் எளிதில் பெறப்படுவதாகவும் நம்பப்படுகிறது. தொழிற்சாலைகள் உண்மையில் மக்களுக்குத் தேவையான வளங்களைக் கொடுக்கின்றனவா, மக்கள் நேர்மையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனரா என்பதை இங்கு விவாதிப்போம்
உலக பொருளாதாரம்
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் தொழிற்சாலைகள் பெருகியபோது, அவர்களது தேவைகள் வெகுவேகமாக பூர்த்தி செய்யப்பட்டு, பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கமடைவதை உணர்ந்தனர். அதனால், பொருட்களை உலகெங்கிலும் விற்பதற்காக, உலக பொருளாதார மயமாக்கல், சர்வதேச வாணிபம் முதலிய சிந்தனைகளைக் கொண்டு வந்தனர். உதாரணமாக, கார் தொழிற்சாலையை எடுத்துக் கொண்டால், இயந்திரங்களின் உதவியுடன் ஒரு காரினை சில நிமிடங்களில் உருவாக்கி விடுகின்றனர். இதற்காக எவ்வளவு இயற்கை வளங்கள் சீரழிக்கப்படுகின்றன என்பதைக் கணக்கிட்டால், தனிக் கட்டுரையே எழுதலாம். ஆயினும், கார் நிறுவனத்தினர் தொழில் போட்டியினை மட்டுமே சிந்திப்பதால், இவ்வளவு விரைவாக கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். கார்கள் வெளியாகும் ஆரம்ப நாள்களில் வெகுவேகமாக விற்பனையாகின்றன, நாளடைவில் அதே எண்ணிக்கையில் அவை விற்பனையாவதில்லை. இஃது அனேகமாக எல்லா தொழிற்சாலை உற்பத்திக்கும் பொதுவான விதி. கார்களின் பயன்பாடு பல வருடங்களுக்கு என்பதால், எவரும் பல கார்களை சேர்த்து வைப்பதும் இல்லை. இந்த விதி, தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர் என பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் பொருந்தும். அவை வந்த புதிதில் விற்றதைப் போன்று எப்போதும் விற்பனை ஆகாது. மேலும், கணிப்பொறியின் ஆதிக்கத்தால் மக்கள் இன்று அனேகமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்க விரும்புவதால், பழைய தொழில் நுட்பங்கள் காலாவதியாகின்றன. அடிப்படைத் தேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலைகள், உற்பத்தியைப் பெருக்குவதற்காக, இலக்கினை நிர்ணயித்து, பணியாளர்களுக்கு அதிகப்படியான சம்பளத்தினை வழங்கினர். மக்களின் வாங்கும் திறனும் அதிகமாக இருந்தது. ஆனால் அதிக உற்பத்தியின் இலக்குகள் எட்டப்பட்டதும், விற்பனை மந்த நிலையினை அடைந்தது; தொழிற்சாலைகள் அதே அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்தால் விற்க முடியாது. எனவே, பணியாளர்கள் வேலையை இழக்கின்றார்கள், அல்லது சம்பளம் குறைகின்றது, செலவிடும் திறனும் குறைகிறது.
வேலையில்லா திண்டாட்டம்
ஒரு பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்போது, மக்கள் வேலைவாய்ப்பினை அடைவதும், பணப்புழக்கம் ஏற்படுவதும், அடிப்படை வசதிகள் பெருகுவதும் ஆரம்ப கால உண்மையே. இதனால், அங்குள்ள பெரும்பாலான மக்கள் அதுவரை செய்து வந்த விவசாயம், பசு பராமரிப்பு முதலிய பணிகளைக் கைவிட்டு தொழிற்சாலைகளில் சேர எண்ணுகின்றனர். ஆனால், காலப்போக்கில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தங்களுடைய பணியாளர்களின் வேலையைக் குறைக்கின்றனர், அல்லது வேலையை விட்டு நீக்குகின்றனர். தொழில் போட்டியில் மக்கள் பலரும் வேலையை இழக்கின்றனர். எனவே, ஆரம்பத்தில் வளமான வாழ்க்கையைப் போன்று தோன்றினாலும், அவை நீங்கா துயரில் மக்களைத் தள்ளுகின்றன. தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் வருடந்தோறும் நாடு முழுவதும் கோடிக்கணக்கில் வெளிவருகின்றனர். அவர்களுக்கு வேலை? மிகக் கடினம். இதுதான் இன்றைய சமூகத்தின் நிலை. அரசாங்கம் சேமிப்பினைக் குறைத்து பணப்புழக்கத்தினை அதிகரிக்க முயல்கின்றது, வங்கிகளும் வட்டியினைக் குறைத்து கடன் கொடுக்கின்றன. இவை தற்காலிக பலனைக் கொடுத்தாலும் மீண்டும்மீண்டும் மந்த நிலையை நோக்கியே செல்கின்றன. சில காலத்திற்கு முன்பு ஆச்சரியமும் அதிர்ச்சியும் வழங்கிய இரண்டு சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன. முதலாவதாக, உலக மோட்டார் நிறுவனங்களின் சந்தையாகக் கூறப்பட்ட டெட்ராய்ட் என்னும் அமெரிக்க நகரம் திவாலானதாக அமெரிக்க அரசாங்கமே அறிவித்தபோது, அது நான் மேலே கூறிய கருத்துகளுக்கு உரமிட்டது. இரண்டாவதாக, தமிழகத்தில் சுமார் 2,000 பணியிடங்களுக்கு நிகழ்ந்த அரசாங்கத் தேர்வில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வு எழுதினர். வெறும் தொழிற்சாலைகளை மட்டுமே நம்பியுள்ளவர்கள் அந்த தொழிற்கூடங்கள் மூடப்படும்போது வேறு வேலைகள் எதுவும் தெரியாமல், வாழ்வின் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற இயலாமல் போகின்றனர். ஆயிரம் வருடங்கள் பயன்பட வேண்டிய இயற்கை மூலப் பொருட்கள் அத்தனையும் வெகுவேகமாக உறிஞ்சப்படுகின்றன. மக்களும் வேறு மாற்று வசதிகள் இல்லாமல், தங்கள் வாழ்க்கையினை வேகமாக சீரழித்துக்கொள்கின்றனர். மக்கள் மின்சாரத்தின் வசதிகளை அனுபவிப்பதால், மின்சாரமின்றி வாழ நேரிடும்போது பெரிதும் தவிக்கின்றனர். https://media.tamilbtg.com/uploads/2020/12/4-2.jpg கச்சா எண்ணெய் விலையேறும்போது, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறுகிறது. இதுதான் இன்றைய உலகத்தின் நிலை.
மகிழ்ச்சியற்ற வாழ்க்கை
இன்றைய உலகப் பொருளாதார மயமாக்கலினால், உலகின் ஏதேனும் ஓர் இடத்தில் உற்பத்தி பாதிக்கப்படும்போது அல்லது பிரச்சனை ஏற்படும்போது, உலகெங்கிலும் அப்பிரச்சனையை நாம் கண்ணாரக் காண்கிறோம். உதாரணமாக, கச்சா எண்ணெய் விலையேறும்போது, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறுகிறது. இதுதான் இன்றைய உலகத்தின் நிலை. மக்கள் எதனைத் தேட வேண்டும், எதனை அடைய வேண்டும் என்ற இலக்கினை இழந்துவிட்டனர். எது அவசியத் தேவை என்பதை எண்ணிப் பார்த்திடவும் நேரமின்றி தவிக்கின்றனர். ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம், வசதிகள் என அனைவரும் எதிர்பார்த்தாலும், அதனை அடைந்திடாது அல்லல்படுகின்றனர். அவ்வாறு அடைந்தவர்களாவது மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. சாதாரண தொழிலாளர்கள் முதல் நிறுவனத்தின் உயர்அதிகாரி அல்லது உரிமையாளர் வரை எவரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. வீட்டில் இன்பம் நுகர்வதற்குத் தேவையான அனைத்து பொருட்களும் உள்ளன; இருப்பினும், எவரும் இன்பமாக இருக்க முடிவதில்லை. இவ்வாறு இருந்தும்கூட, அறியாமையின் காரணத்தினால், இவ்வாறு இருப்பதே வாழ்வின் வெற்றி என்று மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையான மகிழ்ச்சியைப் பெறுவதே வாழ்வின் உண்மையான வெற்றியாகும். அந்த மகிழ்ச்சி எவ்வாறு கிட்டும்? பணத்தினால் மகிழ்ச்சி கிட்டும் என்று நினைக்கின்றனர். பணம் படைத்தவர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும், அவர்களைத்தான் மக்கள் தம்முடைய வழிகாட்டி களாக எண்ணுகின்றனர். மக்கள் தங்களின் பேராசையினால் இயற்கையினை வேகமாக அழிப்பதால், உலக வெப்பமயமாக்கல், மேக வெடிப்பு முதலிய பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. அனைவரும் ஏமாற்றுகாரர்களாய் இருக்கின்றபோது தலைவர்கள் மட்டும் எவ்வாறு இருப்பர். பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்துள்ள அரசியல் தலைவர்களாலும் மக்களாலும் இன்றைய நாட்டில் அராஜகம், கொலை, கொள்ளை, இயற்கை சீற்றங்கள் என அனைத்து பிரச்சனைகளும் பெருகிவிட்டன.
உண்மை நிலையை உணர்வோம்
எனவே, தொழிற்சாலைகளும் பணமும் உண்மை மகிழ்ச்சியினை வழங்க இயலாதவை. விலங்குகளைவிட அதிக நேரம் உழைத்தால்தான் வாழ முடியும் என்று நம் நிலை மாறியிருப்பது நம் அவலநிலையே. சுத்தமான குடிநீர்கூட இன்று பணம் இருந்தால்தான் கிடைக்கிறது, காற்றிற்கும் விரைவில் அந்நிலை வந்து விடும் என்று தோன்றுகிறது. எனவே, நமது வாழ்வின் குறிக்கோள் என்ன என்பதை எண்ணிப் பாருங்கள். நம்முடைய உண்மையான தேவை என்ன? இவ்வளவு போராடியும் இன்பம் கிடைக்கவில்லை என்றால், இன்பம் எங்குதான் உள்ளது? ஸ்ரீல பிரபுபாதர் கூறுவார்: “84,00,000 வகையான உயிரினங்களில் 4,00,000 மட்டுமே மனித வகைகள். மீதமுள்ள 80,00,000 உயிரினங்களுக்கு எவ்வித பொருளாதார சிக்கல்களும் இல்லை. ஆனால் இந்த 4,00,000 மனித இனத்திற்கு மட்டும்தான் எவ்வளவு பிரச்சனை. மற்றவை இறைவனுடைய சட்டதிட்டத்தின்படி வாழ்கின்றன, ஆனால் மனிதன் மட்டும் அதனை வேகமாக மீறுவதால், அவன் வேகமாக அழிவடைகிறான்.” இந்த உண்மை நிலையினை நாம் உணர வேண்டும். இறைவனின் சட்டதிட்டங்களை உணர்ந்து, மனித வாழ்வின் விசேஷ தன்மையினைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் வாழும் உடல் தற்காலிகமானது, நாம் விரைந்து பெறும் அத்தனையும் உடலுக்கானவை; உடல் மாறிக் கொண்டே இருப்பதால், உடலின் தேவைகளும் மாறிக் கொண்டே உள்ளன. எவ்வளவு காலம் உடல் தேவைகளுக்காக நாம் போராடுகின்றாமோ அவ்வளவு காலமும் நாம் உண்மையான ஆனந்தத்தினை உணர இயலாது. நாம் இந்த உடல்களல்ல. நாம் பகவான் கிருஷ்ணரின் சக்தி, அவரின் சக்தியான ஜீவாத்மா. நம் கடன் தொழிற்சாலைகளைக் கட்டி அதிலே இரவுபகலாக வேலை பார்த்து அற்ப தேக சுகத்தினை பெற்று மாண்டு போவதல்ல; மாறாக, நமது பணி இறைவனுக்கு சேவை செய்வதே, கிருஷ்ணருக்கும் நமக்குமான உறவினை மீண்டும் ஏற்படுத்த முயற்சி செய்வதே. https://media.tamilbtg.com/uploads/2020/12/5-1.jpg சுத்தமான குடிநீர்கூட இன்று பணம் இருந்தால்தான் கிடைக்கிறது, காற்றிற்கும் விரைவில் அந்நிலை வந்து விடும் என்று தோன்றுகிறது.
ஆனந்தத்தை அடைவோம், வாரீர்!
மனித உடலின் உண்மையான பணி பகவான் கிருஷ்ணருக்கு சேவை செய்து, மீண்டும்மீண்டும் பிறந்து மடியும் நமது சுழற்சியிலிருந்து வெளியேறுவதே. இதுவே நமது இலக்கு. அனைத்து மக்களும் மகிழ்ச்சியான வாழ்வினை அடையும்போது மட்டுமே நாம் வளர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவோம். அதனை செயற்கையான தொழிற்சாலையின் மூலமாகப் பெற முடியாது, கிருஷ்ண உணர்வினை ஏற்படுத்துவதால் மட்டுமே அந்த ஆனந்தத்தினைப் பெறுவோம். எனவே, வெறும் இறையுணர்வு என்றோ, குலம் சார்ந்த பக்தி என்றோ, குணம் சார்ந்த பக்தி என்றோ நின்றுவிடாது, நாம் அனைவரும் கிருஷ்ண உணர்விற்கு ஏற்றம் பெற வேண்டும். இவற்றைச் சொல்லிக் கொடுத்திடவே இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் செயல்படுகிறது. இதனை மற்றுமொரு இந்து ஆலயமாகக் கருதிவிடக் கூடாது. இந்த இயக்கம் உண்மையான ஞானத்தினையும் பக்தியினையும் இனம், மதம், மொழி முதலிய பேதங்களுக்கு அப்பாற்பட்டு போதிக்கக்கூடிய இயக்கமாகும். எனவே, இதன் செயல்பாடுகளில் கலந்து கொண்டு, “எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை” என்பதற்கு ஏற்ப, ஒவ்வொருவரும் கிருஷ்ண பக்தி விஞ்ஞானத்தின் மூலமாக உண்மையான ஆனந்தத்தினை அடைவோமாக. https://media.tamilbtg.com/uploads/2020/12/6-1.jpg “எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை” என்பதைப் பின்பற்றி, ஒவ்வொருவரும் கிருஷ்ண பக்தியின் மூலமாக உண்மையான ஆனந்தத்தினை அடைவோம்.
புதுப்பிக்கப்பட்டது: 24 டிசம்பர், 2020